( நெய்தல் ஆய்வு - ஏப்ரல் 2017 )
A Manual Dictionary of the Tamil Language என்ற ஆங்கிலத் தலைப்புப் பெயருடன் அமெரிக்க மிஷனரியினால் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட தமிழ்-தமிழ் அகராதியின் தமிழ்ப் பெயர் - பெயரகராதி ஆகும். இது 1842 இல் மானிப்பாயில் உள்ள அமெரிக்கன் மிஷன் அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டது. இவ்வகராதியைக் கையகராதி(மனுவல் அகராதி), யாழ்ப்பாண அகராதி, மானிப்பாய் அகராதி, விரிவகராதி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் வழக்கம் உள்ளது.
யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மிஷனரிகள் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழ்-தமிழ், தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் அகராதிகளை உருவாக்கத் தலைப்பட்டனர். இத்தமிழ்-தமிழ் அகராதியானது, உள்ளூர்த் தமிழ்ப் பண்டிதர்களின் துணையுடன், ஜோசப் நைற் (Joseph Knight) அவர்களால் தொடங்கப்பட்டு, லெவி ஸ்பால்டிங் (Levi Spaulding) அவர்களால் நிறைவு செய்யப்பட்டது. வெஸ்லியன் மிஷன் பீட்டர் பேர்சிவல் பாதிரியாரும் இவ்வகராதி உருவாக்கத்திற்கு உதவியுள்ளார். இவ்வகராதிப் பணியில் உள்ளூர்த் தமிழ்ப் புலமையாளர்கள் பலரும் பணியாற்றியுள்ளனர். கொழும்பைச் சேர்ந்த காபிரியேல் திசேரா, உடுவிலைச் சேர்ந்த சந்திரசேகர பண்டிதர், இருபாலையைச் சேர்ந்த சேனாதிராய முதலியார், அளவெட்டியைச் சேர்ந்த எவாட்ஸ் கனகசபாபிள்ளை, உடுவிலைச் சேர்ந்த மயில்வாகனன், நவாலியைச் சேர்ந்த வி.வயிரமுத்துப்பிள்ளை, சுவாமிநாதர் ஆகியோர் இதில் பங்கெடுத்துள்ளனர். அந்நாட்களில் உடுவில் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்ற மாணவிகளும் அகராதிச் சொற்களைப் படியெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வகராதித் திட்டத்தில் ஈடுபட்ட மிஷனறிகள் எழுதிய ஆரம்பகாலப் பதிவுகள் \ குறிப்புகள் மேற்கூறிய தகவல்களைத் தருவதாக உள்ளன.
கையகராதியின் இரு பிரதிகள்
கையகராதியின் இருவேறு பிரதிகளும் தமிழ் அகராதியியல் ஆய்வாளர்கள் மத்தியில் இன்னமும் பிரித்து உணரப்படாத நிலையே காணப்படுகிறது. உண்மையில் வேறு வேறான இரு பிரதிகள் உள்ளனவென்பதையே தமிழ் ஆய்வாளர்கள் பலரும் அறியவில்லை. 1865 முதல் 2016 வரையில் கையகராதித் தொடர்பில் காணப்படும், பதிவுகளினூடாகப் பிரதி வேறுபாடுகளைப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தரப்பட்டுள்ள அட்டவணை கையகராதியின் இருவேறு பிரதிகளையும் பார்வையிட்டு உருவாக்கப்பட்டதாகும்.
தரப்பட்டுள்ள அட்டவணை கையகராதியின் இருவேறு பிரதிகளையும் பார்வையிட்டு உருவாக்கப்பட்டதாகும்.
1865 இல் John Murdoch அவர்கள் தனது Classified Catalogue of Tamil Printed Books என்ற நூற்றொகையில் 1849 இல் வெளியான களத்தூர் வேதகிரி முதலியார் அவர்களின் தொகைப்பெயர் விளக்கம் என்ற நூலிற்கான பதிவில் கையகராதியினை Tamil Dictionary with additions என்றே குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மேலதிக சேர்க்கைகள் இல்லாத ஒரு தமிழ் அகராதி அதாவது கையகராதியின் பிறிதொரு பிரதி உள்ளதென்று கருதுவதற்கு இடம் தருவதாகக் கொள்ளலாம்.
1985 இல் மு.சண்முகம்பிள்ளை அவர்கள் தனது தமிழ்-தமிழ் அகரமுதலியின் முன்னுரையில் ( பக்கம் 11 ) குறிப்பிடும் "இதில் பொருள், தொகை, தொடை அகராதிகள் இல்லை, ஆயினும் பின்னர் அச்சிட்டோர் சதுரகராதியில் உள்ளபடி அவற்றையும் அச்சிட்டுச் சேர்த்து இணைப்பாராயினர்" என்ற சொற்றொடரின் மூலம், கையகராதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் உள்ளதைப் பூடகமாக அறிந்துகொள்ளமுடியும். மு.சண்முகம்பிள்ளை அவர்களைத் தவிர வேறெவரும் இந்த அளவிற்குக்கூட இதனை உணரவில்லை, வெளிப்படுத்தவில்லை.
2000 ஆண்டில் வெளியான கிரகரி ஜேம்ஸ் (Gregory James) அவர்களின் Col-porul - A History of Tamil Dictionaries என்ற நூலானது 908 பக்கங்களைக் கொண்டது. தமிழ் ஆய்வாளர்கள் பலருக்கும் கிடைக்கப்பெறாத மூலங்களை இவர் பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களிற் பெற்று நூலில் இணைத்ததன் மூலம் அதனைக் கனதியாக்கியவர். இந்நூலில் மூன்று இடங்களில் காணப்படும் குறிப்புகள், கையகராதியின் பிரதி வேறுபாடுகளைப் பக்க எண்ணிக்கையின் மூலம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.
1. page 163 - "The first edition of the dictionary has 58500 entries in three parts : பெயரகராதி ( meanings ), பொருளகராதி ( synonyms ), தொகையாகராதி ( associatives ) in 898 pages."
2. page 166 - " Spaulding also included some personal details which a bearing upon his lexicographical work : This is the short history of the two Dictionaries which have occupied my attention more or less during the last 3 years and 10 months of my missionary life. One purely Tamul of 771 pages & the other English and Tamul of about 860 pages in small type & in a large octavo size. "
3. page 186 - " Thus where finished these two dictionaries ( one purely Tamul 771 pages and about 58500 words ; and the other English words with Tamul definitions of about 860 pages, both in small type in a large octavo size ) in five years and three months"
மேலே காட்டப்பட்ட மூன்று குறிப்புகளில் முதலாவது - நூலாசிரியர் Gregory James அவர்களின் சொற்கள், மற்றைய இரண்டும் கையகராதியை உருவாக்கிய அமெரிக்க மிஷனரியைச் சேர்ந்த ஸ்பால்டிங், வின்ஸ்லோ ஆகியோரின் சொற்களாக உள்ளன. இதன்வழி அமெரிக்க மிஷனரிகள் தமிழ் அகராதியெனக் குறிப்பிடுவது 674 பக்கங்களில் உள்ள அகராதி என்ற பகுதியையும், 97 பக்கங்களில் உள்ள அனுபந்த அகராதி என்றபகுதியையும் சேர்த்து உள்ள 771 பக்கங்களில் அமைந்து, அண்ணளவாக 58500 சொற்களுக்குப் பொருள் கூறும் பெயரகராதியைத்தான்.
மேலும் அமெரிக்க மிஷனரிகள் தாங்கள் உருவாக்கிய தமிழ் அகராதி மூன்று பிரிவுகளைக் கொண்டது என்றவாறான குறிப்புகள் \ பதிவுகள் எதையும் கொடுக்கவில்லை என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும். கையகராதியின் பக்கங்களுக்கு எண் வழங்கப்பட்டுள்ள ( அகராதி முதல் அனுபந்த அகராதி முடிவு வரைக்கும் தொடர்ச்சியான எண் தமிழில் உள்ளது. ) முறையும் இதனை உறுதி செய்கிறது.
898 பக்கமுள்ள கையகராதியில் அதாவது மேலதிக பிற்சேர்க்கைகளுடன் கூடிய கையகராதியில், பிழை திருத்தத்திற்குப் பின்னரே இரண்டாவது - பொருளகராதி தொடங்குகிறது. அதன் பின்னர் மூன்றாவது - தொகையகராதி இடம்பெறுகிறது. இவ்விரண்டு பிரிவுகளுக்கும் மீண்டும் 1 முதல் பக்க எண் வழங்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. இவ்விரு பிரிவுகளுக்கும் தனித்தனியான பாயிரப் பாடல்களும் உள்ளன.
கிரகரி ஜேம்ஸ் (Gregory James) அவர்கள், தமக்குக் கிடைத்த The American Board of Commissioners for Foreign Missions (ABCFM) குறிப்புகளில் காணப்படும் கையகராதி 771 பக்கங்களைக் கொண்டது என்ற தகவலைப் பார்வையிட்டபின்னரே கையகராதி 898 பக்கங்களைக் கொண்டது என்றும், 58500 சொற்களுக்குப் பொருள் கூறும் பதிவுகள் உள்ளனவென்றும் எழுதியுள்ளார்.
கிரகரி ஜேம்ஸ் (Gregory James) அவர்கள், குறித்த ஒரே கையகராதி எவ்வாறு 127 பக்கங்கள் வேறுபாடு கொள்ள முடியும் என்பதை அவதானிக்கவில்லை, ஆராயவில்லை. ஸ்பால்டிங் அவர்களும் பின்னர் ஜோன் மார்டெக் அவர்களும் கையகராதி octavo (8vo) அளவுடையது என்பதைப் பதிவு செய்துள்ளார்கள், ஆனால் கிரகரி ஜேம்ஸ் அவர்கள் கையகராதியின் அளவு தொடர்பில் எதையும் கூறவில்லை.
மேலும் அவர் தனது நூலில் 162வது பக்கத்தில் குறிப்பிடும் "... which had been begun by Knight with the assistance of A.Chandrasekar Panditar of Uduvil, Senathiraya Mudaliyar and Vedagiri Mudaliar,...." என்ற வாசகமானது சென்னை களத்தூர் வேதகிரி முதலியார் அவர்கள், கையகராதித் திட்டத்தில் ஆரம்பம் முதலே பங்கெடுத்து, உதவியுள்ளார் என்ற பொருள்படும்படி கூறுவது அபத்தமானதொன்றாகும்.
உண்மையில் அமெரிக்க மிஷனரிகள் உருவாக்கிய 771 பக்கங்கள் கொண்ட, அ முதல் வௌ வரை முற்றிலும் ஒரே தொகுதியாக அமைத்து, உயிரெழுத்து, ஆய்தவெழுத்து, உயிர்மெய்யெழுத்து, மெய்யெழுத்து என்ற வரிசையில் தலைச்சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கப்பட்டு, அதாவது அ..., அஃகல்..., அகக்காழ்...., அகோரம்..., அக்கடி... என்றவாறான வரிசைப்படுத்தல் முறையுடன், அண்ணளவாக 58500 சொற்களுக்குப் பொருள்கூறும் கையகராதி உருவாக்கத்தில், சென்னை களத்தூர் வேதகிரி முதலியார் அவர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை. அவர் உதவியுடன் கையகராதி உருவாக்கப்படவில்லை.
நிகண்டுகளில் காணப்படும் பகுப்பாக்க முறையின் தொடர்ச்சியாகவே, தமிழின் முதல் அகராதியான சதுரகராதி உருவாக்கப்பட்டிருந்தது. அதில் காணப்பட்ட பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி என்ற நான்கு பிரிவுகள் காரணமாகவே சதுரகராதி என்ற பெயரும் அமைகிறது.
இவ்வாறாகப் பல பிரிவுகளைக்கொண்ட நிகண்டுகள், பின்னர் நான்கு பிரிவுகளுடனான சதுரகராதியின் பயன்பாட்டில் நிறைவு கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களுக்கு, அ முதல் வௌ வரை முற்றிலும் ஒரே தொகுதியாக அமைந்த கையகராதி உவப்பானதாக இருந்திருக்கவில்லை, இதன் காரணமாகவே மேலதிக பிற்சேர்க்கைகள் கையகராதியில் இணைக்கப்படவேண்டிய நிலை வந்துள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு மற்றிரு பிரிவுகளும் பிற்சேர்க்கைகளாக இணைக்கப்பட்டமையும் 1865 இற்குள் நிகழ்ந்துள்ளது.
இரண்டாவது பொருளகராதி என்பது 70 பக்கங்களுடன் கையகராதியின் மேலதிக பிற்சேர்க்கையாக உள்ளது. இது யாரால் தொகுக்கப்பட்டது என்பது பற்றிய செய்திகள் எங்கும் காணப்படவில்லை.
மூன்றாவதாகத் தொகையகராதி 31 பக்கங்களில் அமைகிறது. இதனை மதுரைக் கல்விச் சங்கத்தைச் சேர்ந்த களத்தூர் வேதகிரி முதலியார் அவர்கள் தொகுத்துள்ளார்கள். ஏற்கனவே நாம் கூறியபடி, 1865 இல் John Murdoch அவர்கள் தனது Classified Catalogue of Tamil Printed Books என்ற நூற்றொகையில் 1849இல் வெளியான களத்தூர் வேதகிரி முதலியார் அவர்களின் தொகைப்பெயர் விளக்கம் என்ற நூலிற்கான பதிவின் மூலமும், கையகராதியில் இடம் பெற்றுள்ள உடுவை நகர் முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை ( Williams Nevins ) அவர்களால் எழுதப்பட்ட இருபத்துநான்குசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் மூலமும் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை அவர்களின் ஆசிரியவிருத்தத்தின் பின்னிரு பாடல்களும், கையகராதி, அச்சடிக்கப்பட்ட பின்னர்தான், அனுபந்தமாக களத்தூர் வேதகிரி முதலியாரின் ஆக்கம் சேர்க்கப்பட்டது என்பதைப் பதிவு செய்கின்றன.
இதில், முரணான விடயமும் ஒன்றுள்ளது. மேலதிக பிற்சேர்க்கைகள் இல்லாத கையகராதியிலும், நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை அவர்களின் அதே ஆசிரியவிருத்தம் உள்ளது.
இது எவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்பதை ஒருவாறு ஊகித்தறியலாம்.
நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை அவர்கள் வட்டுக்கோட்டை அமெரிக்க செமினரியின் மாணவர்களில் ஒருவர், 1838இல் கற்றுத் தேறியவர். வட்டுக்கோட்டையில் தொடங்கப்பட்ட ஆங்கில - தமிழ் அகராதித் தொகுப்பு வேலைகளில் வின்ஸ்லோ, ஸ்பாடிங்கு, ஹச்சிங்ஸ் ஆகியோர்களுக்கு உதவி செய்தவர்களில் இவரும் ஒருவர். இவர் சென்னைவரை சென்று இதில் ஈடுபட்டுள்ளார். வேதகிரி முதலியாரும் 1841இல், அமெரிக்க மிஷன் வெளியிட்ட உதயதாரகை இதழில் ஆக்கங்களை எழுதிய தமிழகர்களில் ஒருவர். இவ்வாறாக அமெரிக்க மிஷனரிகளுடன் நெருக்கத்தைப் பேணியவர்களாக இவர்கள் இருவரும் இருந்துள்ளார்கள். இதன் காரணமாக வேதகிரி முதலியார் அவர்களால் தொகுக்கப்பட்ட தொகையகராதி, கையகராதியுடன் அனுபந்தமாக இணைக்கபடவுள்ளதை முன் அறிந்தவராக நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே இவ்விடயம் ஆசிரியவிருத்தத்தில் இடம்பெற்றிருக்கலாம் என்று கொள்ள இடம் உள்ளது. இஃது எனது அனுமானம் மட்டுமே, தவறாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அறுதியாகக் கூறவில்லை.
1954இல் தூரன் அவர்களாற் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியத்தில் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் எழுதிய அகராதி என்ற தலைப்பிலான கட்டுரையிலும், பாவலர் சரித்திர தீபகத்தினை ஆராய்சிக் குறிப்புகளுடன் 1975இல் பொன் பூலோகசிங்கம் அவர்கள் பதிப்பித்தபோது, ஆதிமூலமுதலியார் பற்றிய செய்திக்கு எழுதிய குறிப்பிலும், சென்னை களத்தூர் வேதகிரி முதலியார் ஓர் அனுபந்தம் எழுதினார் என்ற பதிவுகள் உண்டு. 1985இல் மு.சண்முகம்பிள்ளை அவர்கள் தனது தமிழ்-தமிழ் அகரமுதலியின் முன்னுரையில் இவ்வனுபந்த அகராதியில் ஏறத்தாள 6500 சொற்கள் காணப்படுகின்றன என்று மேலதிக தகவலைத் தந்துள்ளார்.
பெயர், பொருள், தொகை என மூன்று பிரிவுகள் கொண்ட அகராதியென்றவர்கள்
· 1865, John Murdoch, Classified Catalogue of Tamil Printed Books (Page 209)
Part I - பெயரகராதி 794pp,
Part II - பொருளகராதி 70pp,
Part III - தொகையகராதி 31pp
· 1978, A.Dhamotharan, Tamil Dictionaries A Bibliography (Page 55) Three Parts, viz,
a) peyarakarati (meanings) - 771pp,
b) porulakarati (synonyms) - 70pp,
c) tokaiyakarati (group-names) - 31pp
· 2000, Gregory James, Col-porul - A History of Tamil Dictionaries (page 163)
· 2004 December, எச்.சித்திரபுத்திரன் & கு.ர.சரளா, Journal of Tamil Studies, தமிழ் ஒரு மொழி அகராதிகளின் வளர்ச்சிப் போக்கும் அமைப்பு மாற்றமும். (Page 57)
· 2014 ராஹிலா ஷியாத், Kalam: International Journal of Faculty of Arts & Culture, ஈழத்தில் தமிழ் அகராதி முயற்சிகள் ஒரு பார்வை (Page 54)
· 2016, முனைவர் கு.ர.சரளா, தமிழ் அகராதித் தொகுப்பு நெறிமுறைகள் (குறுந்திட்ட ஆய்வு) (Page 41)
மேற்கூறப்பட்டவை யாவும், கையகராதி - மூன்று பிரிவுகளைக் கொண்டது என்று நேரடியாக எழுதப்பட்டவையாகும். கையகராதியினை உருவாக்கிய அமெரிக்க மிஷனரியினர் வழங்கிய தமிழ்ப் பெயரான பெயரகராதி என்பதைக் கையகராதியின் ஒரு உட்பிரிவு என்பதாக ஆய்வாளர்கள் கட்டமைத்துக் கூறுவது விநோதமானது.
பெயரகராதி என ஒரு பிரிவு கொண்ட அகராதியென்றவர்கள்
· 1901, நா.கதிரைவேற்பிள்ளை, தமிழ்ப்பேரகராதி ( Page 13, 14 )
· 1909, L.D.Barnett & G.U.Pope, A Catalogue of the Tamil Books in the library of The British Museum ( Page 84 ), பெயரகராதி pp 771, xxii
நா.கதிரைவேற்பிள்ளை அவர்கள் தனது தமிழ்ப் பேரகராதியின் இரண்டாம் பதிப்பின் பதிப்புரையில்,
என்று கூறும் மேற்கண்ட சொற்பதங்கள், கையாகராதியில் சொல், பொருள், தொகை போன்ற பிரிவுகள் இல்லையென்பதைக் கூறுவதாக உள்ளன.
ஆக, ஆய்வாளர்கள், கையகராதியின் குறித்த இரண்டு பிரதிகளையும் பார்வையிட்டால் மட்டுமே, இரு வேறுவேறான பிரதிகள் உள்ளனவென்பதை அறிந்துகொள்ள முடியும் என்ற நிலை இல்லை.
காலத்தால் முந்திய தமிழ் நூற்பட்டியலான 1865 - ஜோன் மர்டக் நூற்றொகையையும், 1909 - எல்.டி.பர்னாட், ஜி.யு,போப் அவர்களின் பிருத்தானிய அருங்காட்சியகத் தமிழ் நூற்பட்டியல் என்ற இரு நூற்றொகைகளைப் பார்வையிடும் அனைவருமே கையகராதியின் இருவேறு பிரதிகள் உள்ளன என்பதைத் தெளிவாக உணர முடியும். 1865 - 2016 இடைப்பட்ட 151 ஆண்டுகளில், இன்றுவரை, இப்பிரதிகள் இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை எந்தவொரு ஆய்வாளரும் ஒப்பிட்டு எழுதவில்லை.
நான்கு பிரிவுகளைக் கொண்ட அகராதியென்றவர்கள்
· 1965, சுந்தர சண்முகனார், தமிழ் அகராதிக்கலை (Page 392)
· 1984, தா.வே.வீராசாமி, வாழ்வியற்களஞ்சியம் தொகுதி 1, கட்டுரைத் தலைப்பு - அகராதி (Page 73)
· 2012, புலோலியூர் வேல் நந்தகுமார், ஜீவநதி 2012 கார்த்திகை இதழ், தமிழில் அகராதிகளின் தோற்ற வளர்ச்சியும் ஈழத்தவர்களின் பங்களிப்பும் (Page 169)
மேற்கூறிய மூவரும் கையகராதியின் எந்தவொரு பிரதியையும் நேரடியாகப் பார்வையிடாமல் கட்டுரைகளை வரைந்துள்ளார்கள். சுந்தர சண்முகனாரின் தமிழ் அகராதிக்கலை என்ற நூலானது, தமிழ் அகராதியியல் ஆய்வாளர்கள் அனைவருக்கும் மிகவும் அறிமுகமான ஒரு நூலாகும், இது பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இன்றும் கிடைக்கக்கூடியவாறு சென்னையில், இரண்டு பதிப்பகங்கள் இதனை வெளியிட்டு வருகின்றன. பின்னவர்கள் இருவரும் சுந்தர சண்முகனாரின் தமிழ் அகராதிக்கலையை ஆதாரமாக வைத்து கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்று நம்புவதற்கு இடமுள்ளது.
கையகராதியின் புதிய பதிப்பு - யாழ்ப்பாண அகராதி
2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தமிழ்மண் பதிப்பகம் கையகராதியினை யாழ்ப்பாண அகராதி என்ற தலைப்புடன் வெளியிட்டிருந்தது. புதுப்பொலிவுடன் 163 ஆண்டுகளுக்குப் பின் 2005இல் மீண்டும் வெளிவருகிறது என்ற முன்னட்டை வாசகத்துடன் வெளிவந்துள்ளது. இலங்கையில் சேமமடு பதிப்பகம் இதனை வெளிட்டுள்ளது.
2005இல் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட யாழ்ப்பாண அகராதியானது, மேலதிக பிற்சேர்க்கைகள் இல்லாத கையகராதியினை மூல ஆதாரமாகக் கொண்டுள்ளது. இப்புதிய பதிப்பில், 1842 பதிப்பில் காணப்படும் அகராதி என்ற தலைப்பிலான 674 பக்கங்களில் உள்ள பகுதியும், அனுபந்த அகராதி என்ற தலைப்பிலான 97 பக்கங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதாவது அனுபந்த அகராதி என்ற பகுதியில் காணப்படும் சொற்கள் யாவும், அகரவரிசைப்படி உரிய இடங்களில் சேர்க்கப்பட்டு, அ முதல் ஞொள்ளுதல் வரையிலான சொற்கள், 483 பக்கங்களில் அமைந்த பகுதி 1 இலும், த முதல் - வௌவால் வரையிலான சொற்கள், 486 பக்கங்களில் அமைந்த பகுதி 2 இலும் அமைந்து, 1/8 தெம்மி அவளவிலான இரண்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. 1842 பதிப்பில், 22 பக்கங்களில் காணப்படும் பிழை திருத்தங்கள் இப்பதிப்பில் களையப்பட்டுள்ளன என்று முனைவர் கி.செயக்குமார் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு தெரிவிக்கிறது. யாழ்ப்பாண அகராதியில் தலைச்சொற்களைத் தடித்த எழுத்துடனும், தலைச்சொல்லையும் பொருள்விளக்கச் சொற்களையும் சிறு கோடு ( - ) ஒன்றின் மூலம் வேறுபடுத்தியும் தந்துள்ளார்கள்.
புதிய யாழ்ப்பாண அகராதியில், தமிழ் அகராதியியலில் துறைபோகிய நீண்டகாலச் செயற்பாட்டாளராகிய முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களின் அறிமுகவுரையில், "வேதகிரி முதலியார் யாழ்ப்பாண அகராதிக்கு உதவினார்" என்ற வாசகமானது காணப்படுகிறது. இதனை, கிரகரி ஜேம்ஸ் அவர்களின் நூலில் இருந்து எடுத்து மேற்கோள் காட்டியுள்ளார். இதன் மூலம் முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களும் கையகராதியின் பிரதி வேறுபாடுகளைத் தெரிந்திருக்கவில்லை என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ளலாம். புதிய பதிப்பில் ஓரிரு இடங்களில் அகரவரிசை முறை மாறியுள்ளது என்பதையும் தனது அறிமுகவுரையில் கூறியுள்ளார்.
பொதுவாகத் தமிழ் அகராதித்துறையைச் சேர்ந்த அனைவரும் தமிழ் அகராதிகள் பற்றிக் கூறும் ஒரு சொல்லாடல் "சதுரகராதி மரபு" என்பதாகும். அதாவது நான்கு பிரிவுகளைக்கொண்ட அகராதிகளைச் சதுரகராதி மரபில் வந்த அகராதி எனச் சுட்டுவர். தமிழ் அகராதிகள் யாவற்றையும் இந்த அளவீடு கொண்டு பிரித்துப் பேசும், எழுதும் வழக்கமும் உள்ளது. தற்காலத் தமிழ் அகராதியியலாளர்கள் அனைவருமே, "முற்றிலும் ஒரே தொகுதியாய் அமைந்து அகரவரிசையில் சொற்களுக்குப் பொருள் தரும் அகராதி, 1904இல் வந்த தமிழ்ச் சொல்லகராதி" என்ற கருத்துடன் எழுதி வந்துள்ளதைக் காணலாம். இந்தவகையில், 1937இல் இ.மா.கோபாலகிருஷ்ணக் கோன் அவர்கள் வெளியிட்ட மதுரைத் தமிழ்ப் பேரகராதியை, சந்தியா பதிப்பகம் மீண்டும் 2004இல் வெளியிட்டபோது, முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்கள் வழங்கிய முன்னுரையில், சதுரகராதி மரபில் வந்த இறுதிக் கண்ணி என்று மதுரைத் தமிழ்ப் பேராகராதியைச் சுட்டியுள்ளார். இந்நிலையில், முற்றிலும் ஒரே தொகுதியாய் அமைந்த புதிய பதிப்பு யாழ்ப்பாண அகராதியின் அச்சுக்குத் தயாரான (draft copy) பிரதியைப் பார்வையிட்டவரான முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் இந்த "சதுரகராதி மரபு" என்ற அளவீடு கொண்டு ஏன் அணுகவில்லையென்பது என்னை ஆச்சரியப்படுத்தும் விடயமாகும்.
கையகராதியின் புதிய பதிப்பு வெளிவரும்போது, கடந்தகாலத்தில் கையகராதி பற்றி எழுதப்பட்ட அத்தனை பதிவுகளையும் ஆராய்ந்து, கையகராதியில் காணப்படும் அகராதியியற் கூறுகளை ஆராய்ந்து, தமிழ் அகராதி வரலாற்றில் கையகராதி பெற்றிருந்த பெருமைகளைச் சிதைக்காது, ஒரு கனதியான முன்னுரை எழுதப்பட்டிருக்கவேண்டும், அது நிகழவில்லை. சூ.இன்னாசி அவர்கள் சதுகராதி ஆராய்ச்சி செய்தது போன்று, கையகராதி பற்றி ஆராய்ச்சிகள் செய்யப்படாமை கவலை தருவதாக அமைகிறது.
பதிப்புரையில் யாழ்ப்பாண அகராதியை வெளியிட்டவர்கள் "புதிய பொலிவோடும் மிகச்சிறந்த கட்டமைப்போடும் வெளிவருகிறது" என்று கூறினாலும், அவையாவும் யாழ்ப்பாண அகராதியை விற்பதற்கான விளம்பர வாசகமே.
உண்மையில் 2005இல் வெளியான யாழ்ப்பாண அகராதியில், அகராதியியற் கூறுகள் சிதைக்கப்பட்டுள்ளன என்று ஆணித்தரமாகக் கூறலாம். துறைபோகிய அகராதியியற் செயற்பாட்டாளர் எவரும் புதிய பதிப்பின் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கவில்லை. புத்தக வடிவமைப்பாளர்களும், மெய்ப்புத் திருத்துநர்களும் இணைந்து உருவாக்கிய பிரதியாகவே இது அமைந்துள்ளது. 1842இல் வெளியான கையகராதியில் இடம்பெற்ற அகராதியியல் உத்திகள் எவை என்பது இவர்களுக்குத் தெரியாத காரணத்தினால் இது இடம்பெற்றுள்ளது.
அறிமுக உரையில் முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் குறிப்பிடும் ஓரிரு இடங்களில் அகரவரிசை எவ்வாறு மாறியுள்ளது என்பதை நோக்குவோம்.
· புதிய பதிப்பு யாழ்ப்பாண அகராதியில், முதல் பக்கத்தில் அகங்களித்தல் என்னும் தலைச்சொல் இரண்டு தடவைகள் இடம்பெற்று இரண்டு பொருள்விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இது 1842 பதிப்பில் அகராதி என்ற பகுதியில் ஒரு இடத்திலும் (பக்கம் 1), அனுபந்த அகராதி என்ற பகுதியில் ஒரு இடத்திலும் (பக்கம் 675) இடம் பெற்றிருந்தது. இதனை அகங்களித்தல் - மனமகிழ்தல், மனமதர்த்தல் என்று தருவதற்குப் பதிலாக இரண்டு இடங்களில் தலைச்சொல்லாகத் தந்து, பொருள்விளக்கங்களையும் தனித்தனியாகத் தந்துள்ளார்கள். இவ்வாறு சில இடங்களில் நிகழ்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
· 1842 பதிப்பில் அனுபந்த அகராதி பகுதியில் இடம்பெற்ற சொற்களை உரிய இடங்களில் இணைக்க முற்பட்டபோது, சில இடங்களில் தவறான இடத்தில் இணைத்ததினால் அகரவரிசை மாறி வரும் நிலை காணப்படுகிறது. எடுத்துக்காட்டு - அதிலோகம், அதிவசனம் ஆகிய இரண்டு தலைச்சொற்கள், இவ்விரு சொற்களும் அனுபந்த அகராதியில் பக்கம் 685 இல் இருந்து எடுத்துவரப்பட்டவை. இவ்விரு சொற்களும் புதிய பதிப்பில் பக்கம் 23 இல், அதிரோகம் - அதிர் ஆகிய இரண்டு சொற்களுக்கு இடையில் தவறாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல இடங்களில் நிகழ்ந்துள்ளது.
அடுத்து, கையகராதியின் 1842 பதிப்பில் காணப்பட்ட அகராதியியல் உத்தி அல்லது சிறப்புத் தன்மை, புதிய பதிப்பு யாழ்ப்பாண அகராதியில் எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை நோக்குவோம்.
கையகராதியின் 1842 பதிப்பில், குறித்த ஒரு தலைச்சொல்லிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்விளக்கச் சொற்கள் வருமிடங்கள் எல்லாம், பொருள் விளக்கச்சொற்களும் அகரவரிசையில் அடுக்கப்பட்டுத் தரப்பட்டிருந்தன. அகராதிப் பகுதி, அனுபந்த அகராதிப் பகுதி ஆகிய இரண்டு இடங்களிலும் இந்த முறை பின்பற்றப்பட்டு இருப்பதைக் காணலாம்.
· அகம் - இடம், உள், தானியம், பள்ளம், பாவம், பூமி, மரப்பொது, மனம், வீடு ( பக்கம் 1 )
· அகம் - ஆன்மா, உபத்திரவம், ஏழனுருபு, ஓர் மரம், குணாகுணம், சூரியன், பாம்பு, மலை, வருத்தம் ( பக்கம் 675 )
இதனைப் புதிய பதிப்பில்
· அகம் - இடம், உள், தானியம், பள்ளம், பாவம், பூமி, மரப்பொது, மனம், வீடு, ஆன்மா, உபத்திரவம், ஏழனுருபு, ஓர் மரம், குணாகுணம், சூரியன், பாம்பு, மலை, வருத்தம் ( பக்கம் 2 )
என்று தந்துள்ளதன்மூலம், 1842இலிருந்து பேணப்பட்டுவந்த கையகராதியின் உத்தி, சிறப்புத்தன்மை சிதைக்கப்பட்டு அதன் பெருமை மழுங்கடிக்கப்படுகிறது.
இது உண்மையில்,
· அகம் - ஆன்மா, இடம், உபத்திரவம், உள், ஏழனுருபு, ஓர் மரம், குணாகுணம், சூரியன், தானியம், பள்ளம், பாம்பு, பாவம், பூமி, மரப்பொது, மலை, மனம், வருத்தம், வீடு
என்ற அகரவரிசையில் அடுக்கப்பட்டிருக்கவேண்டும். துறைபோகிய அகராதியியல் தொடர் செயற்பாட்டாளர் ஒருவர் மேற்பார்வை செய்து, யாழ்ப்பாண அகராதியின் புதிய பதிப்பு உருவாக்கப்பட்டிருப்பின் இத்தவறுகள் நிகழ்ந்திருக்கா.
1842 பதிப்பில் அகராதி, அனுபந்த அகராதி ஆகிய இரண்டு இடங்களிலும் இடம்பெற்ற தலைச்சொற்கள் அனைத்திலுமே, புதிய பதிப்பு யாழ்ப்பாண அகராதியில் பொருள்விளக்கச் சொற்கள் அகரவரிசையின்றித் தரப்பட்டுள்ளன.
அடுத்து, 1842 பதிப்பில், 22 பக்கங்களில் காணப்படும் பிழை திருத்தங்கள் இப்பதிப்பில் களையப்பட்டுள்ளன என்று வெளியீட்டாளர்கள் கூறியிருந்தாலும், அது முற்றிலுமாக உணர்ந்து செய்யப்படவில்லை என்பதைப் பின்வரும் எடுக்காட்டுக்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
1842 பதிப்பின் பிழைதிருத்தம் பக்கத்தின் முகப்பில் தரப்பட்டிருக்கும் குறிப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை.
அக்கரவிலக்கணம், அக்கினித்தம்பம், அசுவபரிட்சை, அத்திரபரிட்சை, அதிரிசயம், அலங்காரம், அவத்தைப்பிரயோகம் ஆகிய தலைச்சொற்களுக்குரிய பொருள்விளக்கச் சொற்றொடர் "கலைஞானமறுபத்தினான்கினொன்று" என்று காணப்படும் இடங்களில் பிழை திருத்தப்படவில்லை.
1842 பதிப்பின் பிழைதிருத்தம் பகுதியில் தள்ளல் என்ற ஒரு பிரிவு உள்ளது. இது மேற்படி சொற்களை நீக்கவேண்டும் என்பதைக் கூறுவதாகும். இவ்வாறு தள்ளல் என்பதன் கீழ்த் தரப்பட்டிருக்கும் சொற்கள் யாவும் புதிய பதிப்பு யாழ்ப்பாண அகராதியில் நீக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அது முற்றிலும் நிகழவில்லை, சில பொருள்விளக்கச்சொற்கள் நீக்கப்பட்டுள்ளன, ஆனால் அது தலைச்சொற்களைத் தள்ளல் என்று சுட்டப்பட்டபோதும், அவை நீக்கப்படவில்லை. அத், அவனூதி, அவையவம், அவையவவுருவகம், அவையவியுருவகம், அழுக்கல், அனியமவுவமை, அனியாயம், அனீதர் போன்ற தலைச்சொற்கள் நீக்கப்படவில்லை. இவ்வாறு பல சொற்கள் நீக்கப்படாமல் உள்ளன.
எடுத்துக்காட்டாக அ வரிசையில் உள்ளவற்றை நாம் பார்வையிட்டபோது இவை தென்பட்டன, இது ஒரு பதச்சோறு மட்டுமே.
தற்காலத்தில் கிடைக்காத பழைய அரிய நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவது என்பது நல்லதுதான், ஆனால் அம்முயற்சியானது, கடந்த காலத்தில் குறித்த நூல் கொண்டிருந்த உட்கூறுகளையும், சிறப்புத் தன்மைகளையும் சிதைக்காது, அந்நூலின் கடந்தகாலப் பெருமை காப்பாற்றப்படும் நிலை பேணத்தக்கதாகவே அமையவேண்டும். அதிலும் உரைநடை நூல்களை விட, நோக்குநூல்களைப் புதிய பதிப்பாக வெளியிடும்போது மிக மிகக் கவனத்துடன் செய்தல் வேண்டும். பல முறை மெய்ப்புத் திருத்தங்கள் செய்யப்படல் வேண்டும். இவ்வாறு உணர்ந்து செய்யப்படும் வேலைகளைத் தமிழ்த் தொண்டாகக் கொண்டாடலாம், புகழ்ந்து போற்றலாம். அவ்வாறில்லாமல், அதிக தவறுகளுடன், பிரதியின் கடந்தகாலப் பெருமைகளைச் சிதைத்துச் செய்யப்படுபவை வியாபார நோக்கம் கொண்டவையாகவே கொள்ளப்படும்.
பிற்குறிப்பாகச் சில, மேலே கூறப்பட்டவை யாவும் 1842இல் வெளியான கையகராதி எது என்பது பற்றியே, கையாகராதியில் இருந்து பிற்காலத்தில் கிளைத்தவை பற்றியல்ல அவற்றைத் தனியாக பிறிதொரு இடத்தில் அலசலாம்.
அகராதி,
ஈழம்,
மானிப்பாய் அகராதி,
யாழ்ப்பாண அகராதி,
A History of Tamil Dictionaries,
Colporul,
Gregory James